தமிழகத்தில் இருந்து வரும் கடிதங்களில் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து உள்ளதாகப் பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும், அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்குத் தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.