சென்னையின் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
சென்னையின் நகர் பகுதிகளில் திடீரென காலை கருமேகம் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில், அண்ணா சாலை, கோடம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கடந்த சில வாரங்களாகச் சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கனமழை காரணமாகக் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனிடையே சென்னை கோயம்பேடு சந்தைக்குள் மழையால் குளம் போல் நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வருகை குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் அவதியடைந்தனர். மேலும், தேங்கி நிற்கும் நீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதே போலச் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்திலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆங்காங்கே நீர் தேங்கியபோதும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 1 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த கனமழை காரணமாக ரயில்வே பாலத்தின் கீழே சாலையில் மழைநீர் தேங்கியது. இதில் பழவேற்காடு நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் பிற வாகனங்கள் அந்த வழியாகச் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.