உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரதிநிதிகள் அளிக்கும் சட்டமுன்வடிவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், தற்போது 2 முக்கிய சட்ட முன்வடிவுகளை அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி பிரதிநிதித்துவம் மூலம் 12 ஆயிரத்து 900 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன் எனவும் குறிப்பிட்டார்.
அருந்ததியர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழிந்தபோது இருந்த மனநிறைவு தற்போதும் உள்ளதாகத் தெரிவித்தார்.