சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடனை திருப்பித் தரக் கோரிய வழக்கில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அன்னை இல்லம் தனக்குச் சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என துஷ்யந்தின் தந்தை ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.