திருவொற்றியூர் அருகே மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் பிற கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
சென்னை திருவொற்றியூர் திருச்சினாகுப்பம் பகுதியில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அரசு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுவதற்கு அதிகாரிகள் அதிக பணம் கேட்பதாக கூறி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் திமுக, அதிமுக, தவெக கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திடீரென திமுக மற்றும் பிற கட்சியினர் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனடியாக, போலீசார் அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.