சேலத்தில் 15 ஆயிரம் டன் கரும்பு உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 கோடி ரூபாய் வரை நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகளை மோகனூரில் உள்ள கரும்பு ஆலைக்கு அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகியும், அதற்கு வழங்க வேண்டிய தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் இருப்பதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இத தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள், 15 ஆயிரம் டன் கரும்பை உற்பத்தி செய்து அனுப்பியுள்ள நிலையில், 5 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமலும், பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலும் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.