திருச்செந்தூர் அருகே சாதி தீண்டாமையால் உயிரிழந்த தூய்மை பணியாளர் இறப்பிற்குக் காரணமான திமுக பேரூராட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த சுடலைமாடனை, திமுக பேரூராட்சி தலைவரின் மாமியார் சாதிப்பெயரைக்கூறி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த அவர் கடந்த 2022-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் திமுக பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயலர் பாபு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரூராட்சி தலைவரான ஹிமைரா ரமீஷ் பாத்திமா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மறைந்த சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.
அப்போது பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தனக்கில்லை என ஆட்சியர் இளம் பகவத் கூறியதாகத் தெரிகிறது. ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதவராகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியரின் இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.