பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீட்டை பாஜக தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.
பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக குற்றம் சாட்டிய அவர், மாநில தலைவராக தனது பொறுப்பு பாஜக தொண்டர்களை பாதுகாப்பது என்றும் தெளிவுபடுத்தினார்.
பூத் கமிட்டியை சரி செய்தால் பாஜகவை வெல்ல யாராலும் முடியாது எனக்கூறிய அவர், இரட்டை இலையுடன் சேர்ந்து இரட்டை இலக்கத்தோடு சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக தொண்டர்களுடன் பாஜகவினர் ஒன்றாக பயணிக்க வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தினார்.
இதனிடையே கோயம்புத்தூர் அருகே சோமனூரில் கூலி உயர்வு மற்றும் உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் வலியுறுத்தி கடந்த சில தினங்களாக போராடி வரும் விசைத்தறி நெசவாளப் பெருமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து தங்களது உடலை வருத்திக் கொள்ள வேண்டாமென கேட்டுக் கொண்டதோடு, கூட்டத்தில் உரையாடுகையில், சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசி தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன் , கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி, மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்ததம், கோவை பெருங்கோட்ட மாவட்டத் தலைவர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழி நெடுகிலும் பூக்களை தூவியும், மேள தாளம் முழங்க அவரை வரவேற்ற பாஜகவினர், சாரட் வண்டியில் நயினார் நாகேந்திரனை அழைத்து வந்தனர்.