கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் வரும் 26ஆம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாகப் போற்றப்படுகிறது.
இந்தக் கோயிலில், ராகு பகவான் நாகவல்லி, நாககன்னிகள் என 2 மனைவிகளுடன் தனி சந்நிதியில் எழுந்தருளி மங்கள குருவாக அருள்பாலித்து வருகிறார்.
ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பின்னோக்கி நகரும் நிலையில், வரும் 26ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு அன்றைய தினம் ராகு பகபவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனையும், அதன்பின் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும் எனக் கோயில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.