திருச்சி மாவட்டம் முசிறியில் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தாயே மகனைக் கொன்றது விசாரணையில் அம்பலமானது.
முசிறி அருகேயுள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், அவரது வீட்டின் வெளியே எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மகனைத் தாயே டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
ஏற்கெனவே பல்வேறு கடன்கள் இருந்த சூழலில், கோபிநாத், பெற்றோரின் நிலத்தை விற்க முடிவு செய்து, முன்பணமாக 9 லட்சம் ரூபாயை வாங்கி, நாள்தோறும் மது குடித்துவிட்டு, பொறுப்பின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபிநாத்திற்கும், அவரது தாய் செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வி, வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த கோபிநாத்தின் தலையில் ஆயுதத்தால் தாக்கி, டீசல் ஊற்றி எரித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, செல்வியை போலீசார் கைது செய்தனர்.