ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் எனவும் தாக்குதல் நடத்தியது மன்னிக்க முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள் என விமர்சித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், பாதுகாப்பு குறைபாடுகளை ஆராயவும் முழுமையான விசாரணை தேவை எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், நமது நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனவும் மக்களுக்கு எதிரான இத்தகைய இழிவான செயல்கள் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்….
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மன்னிக்க முடியாது எனவும் குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முழு தேசமும் ஒரே குரலில் ஒன்றுபட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..