பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.
அப்பாவிமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது எனக்கூறிய அவர், பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தை சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்தவுடன் டெல்லியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இலவச உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக அழைத்துவர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர், இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.