மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளை இந்தியா வேட்டையாடும் என தெரிவித்தார்.
பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதல்கள் மூலம் இந்தியாவை ஒருபோதும் மிரட்ட முடியாது என கூறிய அவர், தீவிரவாத செயல்களின் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் கோழைத்தனமான செயலை செய்துள்ளதாகக் கூறிய ராஜ்நாத் சிங், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விட மாட்டோம் எனவும் சூளுரைத்தார்.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.