செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதா? இல்லையா? என்பது பற்றி வரும் 28 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த ஜாமினை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க முற்படுவதாக, அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், சாட்சிகளை கலைப்பார் என அச்சம் இருப்பின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.
இதை நிராகரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை என்றும், மெரிட் அடிப்படையில் ஜாமின் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய இரு நாட்களுக்குள் அமைச்சராக பதவி ஏற்றிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது எனக்கூறிய நீதிபதிகள்,
அமைச்சராக இல்லை என்பதாலே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என்பதை வரும் 28-ம் தேதி தெரிவிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.