வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007-2009 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக 2011-ல் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ல் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவியை வழக்கிலிருந்து விடுவித்த வேலூர் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் வழக்கில் துரைமுருகன், அவரது மனைவி மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, தினந்தோறும் விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.