காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், பாகிஸ்தானுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சிந்து நதி, ஆசியாவின் மிக நீளமான நதிகளில் ஒன்றாகும். 3,610 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சிந்து நதி, பாகிஸ்தானில் பாயும் முக்கியமான நதியாகவும், அந்நாட்டின் தேசிய நதியாகவும் உள்ளது.
கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் சிந்து நதி தோன்றுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 5,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இமய மலைத்தொடர்கள் வழியாக ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் பாய்ந்தோடி, பாகிஸ்தானில் நுழைந்து, பஞ்சாப் மாகாணத்தின் வழியாக, கராச்சிக்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. கடலில் கலப்பதற்கு முன்பு உலகின் மிகப்பெரிய டெல்டாக்களை உருவாக்கும் ஒரு நதியாகச் சிந்து நதி விளங்குகிறது.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் நதி நீர் பங்கீடு பெரும் சர்ச்சையாக இருந்தது. 1951ஆம் ஆண்டில் இரு நாடுகளும் சிந்து நதி உள்ளிட்ட அந்தந்த நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி உலக வங்கியிடம் விண்ணப்பித்தன. கிட்டத்தட்ட 9 ஆண்டுக் கால பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, இருநாடுகளுக்கும் இடையே சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி கையெழுத்தானது.
உலக வங்கியால் நிதியளிக்கப் பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மிக முக்கிய ஒப்பந்தமாகும். இன்று வரை உலக அளவில் வெற்றிகரமான நதி நீர் ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும்.
இதன் படி, இந்தியாவின் கட்டுப்பாட்டில் கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி உள்ளன. மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளன. சிந்து நதி நீரில் 80 சதவீதத்தைப் பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளும் என்றும், 20 சதவீதத்தை இந்தியா பயன்படுத்தலாம் என்றும் ஒப்பந்தத்தில் உள்ளது.
இந்தியாவின் வழியாக ஓடும் சிந்து நதி கிளை நதிகளான ஜீலம், செனாப், சட்லஜ், ரவி, பீஸ் எனப் பிரிந்து பாகிஸ்தானுக்குள் சென்று சிந்து நதியில் மீண்டும் கலக்கிறது .இந்தியாவுக்கு இதில் 20 சதவீத உரிமை இருந்தாலும் இன்று வரை அந்த உரிமையை இந்தியாவிலிருந்த எந்த அரசும் கேட்டுப்பெற்றது இல்லை. பாகிஸ்தான் மட்டுமே அனைத்து நீரையும் பயன்படுத்தி வந்தது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1965, 1971 மற்றும் 1999 ஆண்டுகளில் மூன்று போர்கள் நடந்த போதும்,இந்த நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டில், 40 CRPF படை வீரர்களின் உயிரைப் பறித்த புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா உடனடியாக இராணுவப் பதிலடி கொடுத்தது. அப்போதும், இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வில்லை.
ஆனால், இப்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக நிறுத்தி விட்டது. காஷ்மீர் பகல்காம் தாக்குதலுக்குப் பின், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முக்கிய முடிவுகளில் இது முக்கியமானதாகும். இதன்மூலம், இந்தியா ஆண்டுதோறும் 39 பில்லியன் கன மீட்டர் நீர் ஓட்டத்தை நிறுத்தப்போகிறது என்று கணக்கிடப் பட்டுள்ளது.
ஏற்கெனவே, எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை நிறுத்தும் படி, எச்சரித்தும் கேட்காத பாகிஸ்தானுக்கு, இந்த முறை, வயிற்றில் அடித்திருக்கிறது இந்தியா. இந்த அனைத்து நதிகளின் நீரும் பாகிஸ்தானுக்கு மிக மிக முக்கியம். இந்த நதிகளின் நீரை நம்பித் தான் பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தானின் மொத்த உணவு உற்பத்தியில் 85 சதவீதம் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தே வருகிறது. மேலும், நாட்டின் கருவூலத்துக்குக் கிட்டத்தட்ட 25 சதவீத வருவாய் விவசாயத்தில் இருந்தே வருகிறது. நாட்டின் கிராமப்புற மக்களில் 70 சதவீத மக்களின் வருமானத்துக்கான ஒரே ஆதாரமாகவும் விவசாயமே உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே, பாகிஸ்தானில் நிலத்தடி நீர் பற்றா குறை அதிகரித்து வருகிறது. கராச்சி போன்ற பெரும் நகரங்கள் தனியார் தண்ணீர் டேங்கர்களை நம்பியுள்ளன.
இந்நிலையில், சிந்து நதிகளில் இருந்து நீர் வராவிட்டால், பயிர் விளைச்சல் பாதிக்கும். அரிசி ஆலைகள் பாதிக்கப்படும். உணவுப் பற்றாக்குறை ஏற்படும். நாட்டின் பஞ்சம் ஏற்படும். ஏற்றுமதி குறையும். பாகிஸ்தானின் பணப்புழக்கம் பாதாளத்தில் செல்லும். பொருளாதார வீழ்ச்சிக்கும் உள்நாட்டுக் குழப்பத்துக்கு வழிவகுக்கும்.
இது மட்டுமில்லை. சிந்து நதியும் அதன் துணை நதிகளும் பாகிஸ்தானின் எரிசக்தித் துறையின் முதுகெலும்பாக உள்ளன. நாட்டின் மொத்த மின்சாரத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதத்துக்கும் மேலான மின்சாரத்தை இந்த நதிகளில் அமைந்துள்ள தர்பேலா மற்றும் மங்களா போன்ற நீர்மின் நிலையங்களே வழங்குகின்றன.
இந்தியாவின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து நடவடிக்கையால், இனி பாகிஸ்தானின்
மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கும். இதனால், தினமும் 16 மணி நேரம் வரை நிரந்தர மின்தடை ஏற்படும்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா அணை உட்பட அனைத்து அணைகளையும் தூர்வாருதல் ஆகிய செயல் திட்டங்களை இந்தியா இனி வேகப் படுத்தும். மேலும் அணைகளில் உள்ள வண்டல் மண்ணை அகற்றும். பாகிஸ்தானில் விதைப்புக் காலம் தொடங்கும் போது, இந்தியா அணைகளில் நீரைத் தேக்கும். இதனால், மழைக் காலங்களிலும் பாகிஸ்தானுக்குப் பாதிப்புக்கள் ஏற்படும்.
கடந்த காலத்தில், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது குறித்து இந்தியா பரிசீலித்தபோது, அதைப் போர் நடவடிக்கை என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. எல்லை மீறிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகவே வைத்துள்ள பாகிஸ்தானுக்குச் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருப்பது பாகிஸ்தான் மீதான போரை இந்தியா தொடங்கியுள்ளது.
திவாலான பாகிஸ்தானைப் பாலைவனம் ஆக்கும் நடவடிக்கை என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.