பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 28 பேர் வரை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்ததால், பாகிஸ்தான் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக, பாகிஸ்தானியர்களுக்கு இனி விசா வழங்கப்படாது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள் 27-ம் தேதியோடும், மருத்துவ தேவைக்கான விசாக்கள் 29-ம் தேதியோடும் ரத்து செய்யப்படும் என இந்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசி வாயிலாக உரையாடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தங்கள் மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக வெளியேற்ற அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.