காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளும், ஈவு இரக்கமற்ற கொடூரச் செயலைத் திட்டமிட்டவர்களும், நீதியின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனைகள் கொடுக்கவேண்டும் என்று ஐநா பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பயங்கரவாதம் என்பது எந்த நாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதிகள், ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருந்து எல்லை தாண்டி இன்னொரு நாட்டுக்குள் ஊடுருவி வந்து, பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டு நடத்துகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது. சமீபத்தில், இந்த உண்மையைப் பாகிஸ்தான் அரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக, பயங்கரவாதக் குழுக்களுக்குப் பயிற்சியையும், நிதியுதவியையும், ஆயுதங்களையும்,பாகிஸ்தான் அரசு அளித்து வந்தது என்று பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் நடத்திவரும் பயங்கர வாத தாக்குதல்களை, அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒப்புக் கொண்டிருப்பது, இதுநாள் வரை, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில், சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.பாகிஸ்தானின் லக்க்ஷர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான TRF பொறுப்பேற்ற இத்தாக்குதலில், 26 பேர் கொடூரமாகக் கொல்லப் பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா சபை,அமெரிக்கா, பிரிட்டன்,ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, இஸ்ரேல் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தீவிரவாதிகள் யார் யார் என அடையாளம் காணப்பட்டு, வேட்டையாடப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.
இதில், ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு, வழங்கப்படும் தண்டனை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கும் என்று கூறிய பிரதமர் மோடி சூளுரைத்தார்.
இந்நிலையில்,15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. மேலும், அனைத்து வகையான பயங்கரவாதமும் உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டு, ஒரு நீண்ட அறிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து இயக்கியவர்கள், நிதியுதவி செய்பவர்கள் மற்றும் துணை போனவர்கள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயல்கள் எங்கு எப்போது, யாரால் நடத்தப்பட்டாலும், நியாயப்படுத்த முடியாத குற்றச் செயல்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ள, ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், அனைத்து வழிகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டியுள்ளனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தான் நிரந்தரமற்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.