நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அன்றாட வேலைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டி பதிவாகும் வெயிலிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர் பானங்களை நோக்கி ஒரு தரப்பினர் ஓட, மற்றொரு தரப்பினரோ இயற்கை குளிர் பானங்களையே அதிகளவில் நேசிக்கின்றனர். இந்த கோடையில் உடலை கூலாக வைத்துக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுப்பதும் நீர் சத்து மிகுந்த பழங்களைதான். அதிலும் குறிப்பாக பலரின் விருப்பமாக அமைவது இளநீர் தான்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலும், வெயிலில் வெளியே சுற்று பவர்களின் தேர்வாகவும் இளநீரே சிறந்த குளிர்பானமாக விளங்குகிறது. அனல் கொளுத்தும் வெயிலில் சாலையில் செல்லும் போது ஆங்காங்கே முகாமிட்டிருப்பது இந்த இளநீர் கடைகளே தான். அப்படி மக்களின் முதன்மை தேர்வான இளநீருக்கு எப்போதும் மவுசு அதிகம் தான்.
இந்த இயற்கை குளிரூட்டும் பானமான இளநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு விளைச்சலோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் தேவை இரண்டு மடங்கு ஆன நிலையில் வரத்து குறைவால் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சேலத்தில் கடந்த ஆண்டு 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்ற இளநீர் தற்போது முப்பது ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
வழக்கத்தை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறும் வியாபாரிகள், விளைச்சல் குறைவால் இளநீர் வரத்து குறைந்துள்ளது என தெரிவிக்கின்றனர். இளநீரின் வரத்து குறைவு காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
என்னதான் விலை உயர்ந்தாலும் வெயிலில் இருந்து உடலை கூலாக தற்காத்துக் கொள்ள மக்களின் முதல் தேர்வு இளநீரின் தான்.