கணியாமூர் பள்ளி கலவரத்தைத் தடுக்க வந்தபோது சேலம் டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கில் ஒரே நேரத்தில் 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அதனைத் தடுப்பதற்காகச் சேலத்தில் இருந்து வந்த டிஐஜி அபினவ் குமார், சின்னசேலம் புறவழிச்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டுத் தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக 119 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடைய 3 பேர் இறந்து விட்ட நிலையில், 94 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மீதமுள்ள 22 பேர் ஆஜராகதற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.