நாள்தோறும் வெளியாகும் குற்றச் செய்திகளைப் பார்க்கும்போது தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.
நாள்தோறும் வெளியாகும் குற்றச் செய்திகளைப் பார்க்கும்போது தமிழகம் அமைதிப்பூங்கா என்ற சூழலில் இருந்து மாறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுவதாகக் கூறினார். மேலும், தமக்குக் கொடுப்பது போலவே தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்மணிக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, தங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார்.
இதனை அடுத்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், எல்லா இடங்களிலும் வசிக்கும் மொத்த பேரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள் என்றும், சில கெட்டவர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், ராமாயணத்திலேயே ஒருவர் பெண்ணை தூக்கிச் சென்றதாகச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
பின்னர் பேசிய வானதி சீனிவாசன், கோவைக் குண்டு வெடிப்பில், பயங்கரவாதத்திற்கு எதிரான நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் நிலைபற்றிய அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
திருப்பூரில் அதிகளவில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வசிப்பதால், அங்குக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார்.