பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்ததுடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை இம்மக்களின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்ப்போம்.
காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசத்தின் பக்கமும், மத்திய அரசின் பக்கமும் நிற்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த குரல். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனையில் பேசும் இவர் சுற்றுலாவை நம்பியிருக்கும் காஷ்மீரி அல்ல…. ஒரு அரசு ஊழியர். இந்தியர்களை நாங்கள் என்றுமே நேசிக்கிறோம். ஆனால், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டு மிருகத்தனமான செயல்களைச் செய்தவர்களுக்கு மதம் என்பதே கிடையாது என்பது தான் அவரின் கண்ணீர் குரல்..
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அமலிலிருந்த கால கட்டத்தில் இதே மக்களைத் தான் தங்களுக்கான பாதுகாப்பு கேடயமாக மாற்றி வைத்திருந்தார்கள் தீவிரவாதிகள். அப்போதெல்லாம், தீவிரவாதிகளை வேட்டையாடச் சென்ற பாதுகாப்புப் படையினருக்கு எதிராகக் கல்வீசித் தாக்குதல் நடத்திய அப்பாவி மக்கள் தான், இன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்காக வீதிக்கு வீதி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காஷ்மீர் மக்களின் மனநிலையில் இந்த மாற்றம் ஏற்படுவதற்கான காரணம், அந்த மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தான் என்று நம்புகின்றனர் நடுநிலையான அரசியல் பார்வையாளர்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு சட்டப்பிரிவு 370 என்ற காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய போது விமர்சித்தவர்கள் கூட, இன்று அப்பாவி சுற்றுலாப் பயணிகளுக்காகக் கண்ணீர் சிந்தும் காஷ்மீர் மக்களைக் கண்டு மவுனமாகி இருக்கின்றனர்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உயர்வு பெற்றது. தீவிரவாதிகள் நடமாட்டத்தை முற்றிலுமாக மத்திய அரசு கட்டுப்படுத்தியதால், அதுவரை வாழ்வாதாரமின்றி தவித்த காஷ்மீர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையால் பொருளாதார ரீதியாக மீண்டெழுந்தனர்.
இதன் காரணமாகத் தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்களை மீண்டும் தங்கள் வசம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றுள்ளனர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்.
ஆனால், அது ஒருபோதும் நடக்காது என்று தங்கள் கண்டன நடவடிக்கைகளால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். நாங்கள் பயங்கரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்ற குரலுடன், அவர்கள் நடத்திய கண்டனப் பேரணிகளே இதற்குச் சாட்சி.
இது ஒருபுறம் என்றால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக, காஷ்மீரில் உள்ள ஆயிரத்து 290 கிராமங்களில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி வயதில் மூத்தவர்கள் அவரை அனைவரும் ஒன்று திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்தனையும் நிகழ்த்தினர்.
எந்த தீமைக்கு உள்ளும் ஒரு நன்மை உண்டு என்ற வரிகளை நியாயப்படுத்துவது போல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பாக அமைந்திருந்தாலும், அதன் பிறகு காஷ்மீர் மக்களிடையே பயங்கரவாதத்திற்கு எதிரான தன்னெழுச்சி, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதன்மூலம் காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை இம்மக்களின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதே உண்மை.
பஹல்காம் தாக்குதல் நடந்த நாளன்று கூட, காயமடைந்தவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடி அவர்களின் உயிரைக் காக்க உறுதுணையாக இருந்தது காஷ்மீரில் சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்கள் தான். அந்த விதத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்த காஷ்மீர் மக்கள், இன்று இந்திய மக்களின் பக்கமும், மத்திய அரசிற்குத் துணையாகவும் எழுச்சியுடன் நிற்கின்றனர். இனி வரும் நாட்களில் காஷ்மீரில் பயங்கரவாதம் ஊடுருவ முடியாமல் தடுக்கப் போகும் இரும்புத் திரையும் காஷ்மீர் மக்களே..!