பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பிற்காக அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், எல்லைப் பகுதியின் சூழல் குறித்தும், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.