தேனி அருகே போலி நகையை விற்பனை செய்ததாகக் கூறி சாலையோர வியாபாரியை அடித்துக் கொன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த திலீப், கழுவா ஆகியோர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில், ஆண்டிபட்டியைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் இருவரும் போலி நகைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மோகன் தனது நண்பர் முகேஷின் காரில் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஜெயக்குமார் என்பவர் பண்ணைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று திலீப்பை 3 பேரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், திலீப் உயிரிழந்த நிலையில், கழுவாவை தப்பி செல்லுமாறு கூறியுள்ளனர்.
இது தொடர்பாக திலீப் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், முகேஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், திலீப்பை கொன்று ஜெயக்குமார் தோட்டத்தில் புதைத்ததாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய மோகன், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், திலீப்பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.