ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 7வது முறையாக தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகள் இருப்பது உறுதியான நிலையில், கடந்த 23ஆம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு, எதிர்வினையாற்றும் வகையில், கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு எல்லைப் பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அடுத்தடுத்த நாள்களிலும் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலும், அதற்கு இந்தியாவின் பதிலடியும் தொடா்ந்தது.
இந்நிலையில், ஜம்மு, ரஜெளரி, பூஞ்ச், பாரமுல்லா, குப்வாரா ஆகிய 5 மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. சிறிய ரக ஆயுதங்கள் மூலம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.