உலக பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உலகளாவிய ஊடக பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய ஊடக பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், முதலீட்டாளர்கள் ஒரே குடையின் கீழ் கூடியுள்ளதாக கூறினார்.
படைப்பாளர்களை இணைத்தல், நாடுகளை இணைத்தல் என்ற கருப்பொருளில் உச்சி மாநாடு நடைபெறுவதாகவும், உலக பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், படைப்புத்துறையின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டுமென என வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, திரைப்பட தயாரிப்பு, இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின் மையமாக இந்தியா வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.