பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தாமே பேசினாலும் அது தேசதுரோகம்தான் எனக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குடுபு கிராமத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்ட கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூருவில் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்ற முதலமைச்சர் சித்தராமையாவிடம் இந்த சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர், குடுபு கிராமத்தில் நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் வாழ்க என்று யார் கோஷம் எழுப்பி இருந்தாலும் அது தவறானது எனவும் கூறினார். மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தாமே பேசினாலும் அது தேசதுரோகம்தான் எனத் தெரிவித்தார்.