ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி, இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தனது அரசு இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டை இந்த ஒற்றை முடிவால் தகர்த்துள்ளார் பிரதமர் மோடி. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நாட்டில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு, பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. நாடு தழுவிய அளவில் இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை ஒரு போதும் நடத்தாது கூறிவந்தன.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை, பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, லோக் ஜன சக்தி கட்சி (ராம் விலாஸ்), அப்னா தளம், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டும் இல்லாமல், INDI இண்டி கூட்டணிக் கட்சிகளும் வரவேற்றுள்ளன. 1881ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டு வரையிலான ஆங்கிலேயர் ஆட்சியில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட்டன.
சுதந்திர இந்தியாவில் 1951ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், (ST) பட்டியலின பழங்குடியினர், (SC) பட்டியல் சாதியினர், (OBC) பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பொதுப் பிரிவினர் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில்தான் தேசிய அளவில் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1980ம் ஆண்டு மண்டல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், இட ஒதுக்கீட்டுக்கு 1931 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு தரவுகளே பயன்படுத்தப்பட்டது.
2011ம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட 93 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல்முறையாகச் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தப்படும் முதல் சாதிவாரியான கணக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காங்கிரஸ் கட்சியும், இண்டி கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஓர் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தி உள்ளன என்றும் விமர்சித்தார்.
மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அரசியல் காரணங்களுக்காகச் சாதி கணக்கெடுப்புகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கணக்கெடுப்பு எப்பொது நடைபெறும் என்பது பற்றி தற்போது எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது, பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் செயல் திட்டம் என்று கூறப்படுகிறது
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மத்திய அரசின் இந்த முடிவு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்டத்தை மொத்தமாக காலி செய்திருக்கிறது. உண்மையான வெளிப்படையான தன்மையுடன் இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிப்பதற்குச் சாதி கணக்கெடுப்பு காலத்தின் தேவை என்று கூறியுள்ள அரசியல் வல்லுநர்கள், உண்மையான சமூக நீதியை வலுப்படுத்துவதற்கும் அனைவருக்கும் சமமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும், பிரதமர் மோடி எடுத்துள்ள துணிச்சலான முடிவு இது என்று பாராட்டியுள்ளனர்.
ஏற்கெனவே, மத்திய அரசு, சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் மனவருத்தம் ஏற்படுத்தாமல், பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.