கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் வெயிலின் தாக்கத்தைத் தாள முடியாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு இடையே கொட்டிய ஆலங்கட்டி மழை அப்பகுதி மக்களைக் குதூகலத்தில் ஆழ்த்தியது.
கடந்த சில நாட்களாக 104 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் வரை அங்குப் பதிவாகி வந்த நிலையில், இன்று ஒடுக்காத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் பெய்த ஆலங்கட்டி மழையால் அங்குக் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இது அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.