மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி வேனில் சென்ற தவெக தலைவர் விஜயை, பின் தொடர்ந்து செல்ல முயன்ற தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தவெக தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடியில் நடைபெறும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
முன்னதாக விஜய்யின் வருகையை அறிந்து விமான நிலைய நுழைவு வாயிலில் குவிந்த தவெக தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தங்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்கக்கோரி தவெக தொண்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின் அங்கிருந்து வேன் மூலம் கொடைக்கானலுக்கு புறப்பட்ட தவெக தலைவர் விஜய்யை, அக்கட்சியின் தொண்டர்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அத்துமீறிய சில தொண்டர்களை போலீசார் எச்சரித்தனர்.
இதன் பின்னரும் விஜய் சென்ற வாகனத்தை ஏராளமான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து செல்ல முயன்றனர்.
அவர்களை அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.