பாகிஸ்தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹெல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை நடத்தும் என பாகிஸ்தான் ராணுவம் அச்சத்தில் உள்ளது. பாகிஸ்தானின் ராணுவ தளபதியான ஆசிம் முனீர் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் பதிலடி எப்படியிருக்கும் என தெரியாததால், பாகிஸ்தானின் ஆட்சியை ராணுவம் எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் உளவுத்துறையின் தலைவராக இருந்த முகம்மது அசிம் மாலிக், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு முதல் காலியாக இருந்த இந்த பதவிக்கு, திடீரென ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது அங்கு நிலவும் அசாதாரண சூழலை வெளிக்காட்டி உள்ளது.
அதேபோல, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ராணுவ ஆட்சி பாகிஸ்தானுக்கு புதிதல்ல என்றாலும், பஹல்காம் தாக்குதலுக்கு பிந்தைய சூழலில் இது அபாயகரமானது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 1958, 1969, 1977, 1999 ஆகிய காலகட்டங்களில் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் அந்நாட்டு அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.