கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் பொது மக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணிவரை வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர். எனினும் அவசியத்தை கருதி வெளியில் வரும் போது வெப்ப காற்று வீசுவதால் கடுமையாக பாதிக்கபட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் கிருஷ்ணகிரி நகரில் உள்ள பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், வாகனங்கள் மீது 5 மரங்கள்., 4 மின்கம்பங்கள் விழுந்தது.
நல்வாய்ப்பாக வீடுகளில் யாரும் இல்லாத காரணத்தால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லை. நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள ஜக்கப்பன் நகர்., பழைய பேருந்து நிலையம்., ரவுண்டானா சாலை உள்ளிட்ட பகுதிகளில் 15 மரங்கள் சாலைகளில் விழுந்தன.
நகரின் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. குடியிருப்புகள் மீது விழுந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள்., மின்சார துறையினர் அப்புறப்படுத்தினர்.