புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து செல்லும் நிலையில், விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 8 ஆயிரத்து 867 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதனைத்தொடர்ந்து விழிஞ்ஞம் துறைமுகத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், முதலமைச்சர் பினராயி விஜயன், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜி20 உச்சி மாநாட்டின்போது இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா கடல் வழித்தடம் தொடர்பாகப் பல பெரிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறினார்.
முக்கிய கடல் வழித்தடமாகக் கருதப்படும் விழிஞ்ஞம் துறைமுகத்தால் கேரளா பெருமளவில் பயனடையப்போகிறது எனக்கூறிய அவர், நமது நாட்டின் கடல்சார் துறையை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இண்டி கூட்டணியின் வலுவான தூணாகக் கருதப்படும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஆகியோரிடம் ஒன்று கூற விரும்புகிறேன் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இன்றைய நிகழ்வு பலரின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது எனத் தெரிவித்தார்.