ஓமலூரில் புதிதாகக் கட்டப்பட்ட காய்கறி சந்தையில் திமுகவினருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்படுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், 40 கடைகளை மட்டுமே பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ளது.
இந்த தினசரி காய்கறி சந்தையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்த நிலையில், குலுக்கல் முறையில் கடைகளைப் பிரித்து வழங்காமல், திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அவர்களுக்குள்ளேயே கடைகளைப் பிரித்துக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஓமலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒதுக்கப்பட்டவர்களின் பெயரைக் கூறி கடைகளை வழங்கியதால் அப்பகுதியில் ஏற்கனவே உள்ள 200க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். இதனால், ஓமலூர் பேருந்து நிலைய பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.