தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் திடீரென கோடை மழை வெளுத்து வாங்கியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கடந்து வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதேப்போல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் செல்வதால் மலை கிராம மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமமடைந்துள்ளனர்.