ஈரோட்டில் முதிய தம்பதியரைக் கொலை செய்த வழக்கில் தப்பியோடிய குற்றவாளிகள், மலைப்பகுதிகளில் பதுங்கியுள்ளனரா என போலீசார் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே முதிய தம்பதியரான ராமசாமி – பாக்கியம் ஆகியோரை கொலை செய்த கும்பல், அவர்களிடம் இருந்த 12 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
கோவை சரக ஐஜி, டிஐஜி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த நிலையில், இரு எஸ்.பி-க்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு முகாமிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
அதேபோல, பெருந்துறை காவல் உட்கோட்ட பகுதிகளான சிவகிரி, காஞ்சிக்கோயில், வெள்ளோடு, சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட இடங்களில், தனியாக வசிக்கும் முதியவர்களைக் கணக்கெடுக்கும் பணிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆள்நடமாட்டம் இல்லாத சென்னிமலைக்காடு மற்றும் பணிமனை கரடு மலைப்பகுதிகளில் குற்றவாளிகள் பதுங்கியுள்ளனரா என ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.