தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிஎஸ்-4 ரக வாகனங்களை மோசடியாகப் பதிவு செய்த விவகாரத்தில் தவறு இழைத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்குப் பின் தடைசெய்யப்பட்ட பிஎஸ்-4 ரக வாகனங்கள் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பிஎஸ்-4 ரக வாகனங்களைப் பதிவு செய்ததில் பல அதிகாரிகள் தவறிழைத்தது தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தச் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணை தொடர்பான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.