பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து 11வது நாளாக, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாட்களுக்கு இடையே போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பன்முறை தாக்குதல்களால் பாகிஸ்தான் செய்வதறியாது கதிகலங்கியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த 22 ஆம் தேதி,பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் அப்பாவி இந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் இராணுவத்தின் உதவியுடன் இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதை இந்தியா உறுதி செய்தது.
இதனையடுத்து, பாகிஸ்தானியர்களுக்கான அனைத்து விசாக்களையும் நிறுத்தி வைத்த இந்தியா, நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற உத்தரவிட்டது. அட்டாரி, ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப் பட்டது.
பாகிஸ்தான் விமானங்களுக்குத் தனது வான்வெளியை மூடிய இந்தியா, இந்தியத் துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய அனைத்து கப்பல்களுக்கும் தடை விதித்தது. பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வரும் அனைத்து பாகிஸ்தான் இறக்குமதிகளையும் தடை செய்தது. பாகிஸ்தானுடனான அனைத்து அஞ்சல் மற்றும் பார்சல் பரிமாற்றங்களையும் நிறுத்தியது.
மேலும், சர்வதேச அளவில், பாகிஸ்தானுக்குக் கிடைக்கும் நிதிகளை முடக்கும் முயற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக, அதற்காக, சர்வதேச நிதி ஆணையம் உட்பட உலக நாடுகள் தரும் பணத்தால் பயங்கரவாதத்தைச் வளர்க்கும் பாகிஸ்தானை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இப்படி, மீள முடியாத அளவுக்குப் பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு பெரும் அடி கொடுத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கும் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக கடந்த வாரம் ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்தார்.
பிரதமர் மோடியைத் தனியாகச் சந்தித்த இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கும், பிரதமர் மோடியைத் தனியாகச் சந்தித்து, விமானப் படையின் ஒட்டுமொத்த தயார்நிலை குறித்து பிரதமரிடம் விளக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங்கும், பிரதமர் மோடியைத் தனியாகச் சந்தித்து முப்படைகளின் தயார்நிலை குறித்து விளக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே, அரபிக் கடலில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் இந்தியக் கடற்படை விரிவானப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. எந்தவொரு தாக்குதல்களையும் எதிர்த்து அழிக்கும் வலிமையுடன் INS சூரத் உள்ளிட்ட இந்தியப் போர்க்கப்பல்கள், பல வெற்றிகரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளன.
மேலும், குஜராத் கடற்கரையிலிருந்து சர்வதேச கடல் எல்லைக்கு அருகில், இந்தியக் கடற்படை கப்பல்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப்பகுதியில் உள்ள அரேபியக் கடல் பிராந்தியம் முழுவதும் தனது இருப்பை இந்தியக் கடற்படை வலுப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, இந்தப் பகுதியில் இயங்கும் வணிகக் கப்பல்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், பயிற்சிகள் நடத்தப்படும் இடத்திலிருந்து விலகிச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஜம்முகாஷ்மீர் எல்லைக் கட்டுப்பட்டு பகுதியில் தொடர்ந்து 11 நாட்களாகப் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இரவில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார்கள். அத்துமீறும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீதும் இந்திய இராணுவத்தினரால் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 7000க்கும் மேற்பட்டவர்களுக்கு விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, அனைத்து ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் செய்த பாகிஸ்தான், பல்வேறு ரக துப்பாக்கிக் குண்டுகளை ஏற்றுமதி செய்தது. இதன் விளைவாக, பாகிஸ்தானில் பீரங்கிகள் மற்றும் குண்டுகள் கையிருப்பு குறைந்துவிட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே தீவிர போர் ஏற்பட்டால், பாகிஸ்தானிடம் இருக்கும் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் 4 நாட்களில் தீர்ந்துவிடும் நிலை உள்ளது. வெடிமருந்து தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி இயந்திரங்களும் பழுதாகி துருப்பிடித்துள்ளன. கடந்த 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் மாநாட்டில், இதனைச் சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவத்தைச் சமாளிக்க முடியாது என்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மீதான இராணுவத் தாக்குதல் எங்கே எப்போது எப்படி என்பது இரகசியமாகவே உள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் ராணுவத்தாக்குதல், பயங்கரவாதத்துக்கே வைக்கும் முற்றுப் புள்ளியாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.