ஆலங்குடி அருகே கோயில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டத் திருவிழா முடிந்து வீடு திரும்பிய ஒருதரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும்போது, அங்கிருந்த மற்றொரு தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் மோதலாக மாறி இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
அதன்பின், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் இருசக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மேலும், அரசு பேருந்து மற்றும் காவல்துறை வாகனமும் சூறையாடப்பட்டதால் பதற்றம் நிலவியது.