பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது விதிக்கப்பட்டு இருந்த 2 கோடி ரூபாய் அபராத உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள வீர ராஜ வீரா என்ற பாடலின் இசையமைப்பில் ஏ.ஆர்.ரகுமான் பதிப்புரிமையை மீறியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் வீர ராஜ வீரா பாடலானது தனது தாத்தா மற்றும் தந்தை இசையமைப்பில் வெளிவந்த சிவ ஸ்துதி என்ற பாடலை ஒத்து இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஏ.ஆர்,ரகுமான் தரப்பு சிவ ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டுப் பாடல் உருவானது எனவும், ஆனால் பாடல் நகலெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பையும் கேட்ட நீதிமன்றம் ஏர்.ஆர்.ரகுமான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் 2 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தரப்பு டெல்லி உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மனுத் தாக்கல் செய்தது.
அதன்படி மனுவை விசாரித்த டிவிசன் அமர்வு 2 கோடி ரூபாய் அபராத தொகையைச் செலுத்த வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.