பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் கார் விபத்துக்குள்ளானதற்குப் பாதுகாப்பு குறைபாடு காரணமல்ல என்று, தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 3ஆம் தேதி மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பயணித்த கார் திருமுடிவாக்கம் அருகில் வந்து கொண்டிருந்தபோது அமைச்சரின் நேர்முக உதவியாளரின் வற்புறுத்தலின் பேரில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத காரினை மற்ற வாகனங்களுக்கு இணையான வேகத்திற்கு இயக்க முற்பட்டபோது பின்பக்க சக்கரத்தில் உருவான உராய்வு சத்தத்தை அறிந்து வாகனத்தின் வேகத்தை ஓட்டுநர் குறைத்து சாலையோரம் நிறுத்தியதாகவும், பின்னர் அரசு மரபின்படி வழங்கப்பட்ட மாற்று வாகனத்தில் ஜெ.பி.நட்டா உரியப் பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் பயணித்த வாகனம் நிறுத்தப்பட்டபோது அவரது உடைமைகளை எடுத்து வந்த 8ஆவது வாகனத்தின் பின்புறத்தில் 10ஆவது வாகனம் உரசியதாகவும் இதில் இரு வாகனங்களிலும் மிகக் குறைந்த சேதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.