21 நீதிபதிகளின் சொத்து விவரங்களை உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறை பொறுப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையாக, உச்ச நீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் 33 நீதிபதிகளில் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
அதன் படி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் சொத்து விவரங்களில் வங்கிக் கணக்கில் 55 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் உள்ளது எனவும் வருங்கால வைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் உள்ளது எனவும் பதிவேற்றப்பட்டுள்ளது
இதனையடுத்து மே.14ம் தேதி தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க இருக்கும் நீதிபதி பி.ஆர்.கவாய் வங்கிக்கணக்கில் 19 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் உள்ளது எனவும் அவரது பிஎஃப் கணக்கில் 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல நீதிபதி சூர்யா காந்த் 6 கோடி ரூபாய்க்கு மேல் நிலையான வைப்பு ரசீதுகளைக் கொண்டுள்ளார் எனவும் மே 24 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் நீதிபதி ஏ.எஸ். ஓகா வங்கிக்கணக்கில் 92 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், 21 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பிஎஃப் கணக்கிலும் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி கே.வி. விஸ்வநாதன், 2010 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 120 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளையும், 91 கோடியே 47 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்தியதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதே போல 21 நீதிபதிகளின் சொத்துவிவரங்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம் மீதமுள்ள நீதிபதிகளின் விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை தற்போதைய நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் எதிர்கால நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.