பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம் என்று கேட்டால், பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசிம் முனீர், என்று தான் கூறவேண்டியுள்ளது. யார் இந்த அசிம் முனீர் ? பாகிஸ்தானுக்கே உலை வைத்த இஸ்லாமிய அடிப்படைவாத அசிம் முனீரின் காஷ்மீர் குறித்த அணுகுமுறை என்ன ? பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பொதுவாகவே, பாகிஸ்தான் அரசியலில் தலையிடும் அந்நாட்டு ராணுவம், நாட்டில் அரசை அமைப்பதிலும், அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. யார் பாகிஸ்தானில் ராணுவத் தலைமை தளபதியாக வந்தாலும் காஷ்மீர் விஷயத்தில், கடுமையான போக்கையே கடைப்பிடிப்பார்கள்.
பாகிஸ்தான் பள்ளிகளில், குழந்தைகளுக்கு, காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு நலன் என்றே கற்றுக் கொடுக்கப் படுகிறது. காஷ்மீர் பிரச்சனையைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்ற கருத்தே பாகிஸ்தானியர்களுக்கு உள்ளது.
இஸ்லாமிய மத குருவின் மகனான அசிம் முனீர், மாரின் மங்களாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் ராணுவ பயிற்சி பெற்றார். 1986-இல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த அசிம் முனீர், isi க்கும் தலைவரானார். பாகிஸ்தான் உளவுத்துறைக்குத் தலைவராகப் பதவியேற்ற எட்டு மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு, 2022ம் ஆண்டு, பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்த நேரத்தில், ராணுவத்தின் தலைவராகப் பதவிக்கு வந்தார் அசிம் முனீர். அன்றிலிருந்து பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத் தலைவராக இருந்துவருகிறார்.
தனக்கு முன்பு இராணுவத் தலைவராக இருந்த ஜெனரல் கமர் பாஜ்வாவிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட கொள்கைகள் கொண்ட அசிம் முனீர், மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் இந்தியாவுடன் சுமூகமான உறவை வளர்ப்பதற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை.
உண்மையைச் சொல்லப்போனால், காஷ்மீரில், பாகிஸ்தான் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பிறகு, காஷ்மீரில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப் பட்டுள்ளன.
குறிப்பாகக் காஷ்மீர் மக்கள் அமைதியான வாழ்வை ரசித்து வருகிறார்கள். ஹுரியத் அமைப்பு முற்றிலுமாக செயல் இழந்து விட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பயங்கரவாதத்துக்குக் காஷ்மீரில் இருந்து ஆள் சேர்க்க முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில்,காஷ்மீரில் ஒருவரை கூட பயங்கரவாதியாக மாற்ற முடியவில்லை.
காஷ்மீரில் இப்போது வெறும் 80 பயங்கரவாதிகள் உள்ளதாகவும், அதில் 18 பேர் மட்டுமே உள்ளூர் வாசிகள் என்று மத்திய புலனாய்வின் அறிக்கை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. கல்வி பரவி வருகிறது. காஷ்மீரில் இனி யாரும் துப்பாக்கியை எடுக்க விரும்புவதில்லை என்ற நிலை பாகிஸ்தான் ராணுவத்துக்குக் குறிப்பாக அசிம் முனீருக்கு எரிச்சலாக உள்ளது.
அதனால் தான், பாகிஸ்தானின் ராணுவத் தலைமை தளபதியாகப் பொறுப்பேற்ற அசிம் முனீர், காஷ்மீரை வைத்து ஒரு புதிய சூதாட்டத்தைத் தொடங்கினார். கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி, முசாபராபாத்தில் நடந்த காஷ்மீர் ஒற்றுமை தினத்தில் பேசிய ஜெனரல் அசிம் முனீர், ஏற்கனவே காஷ்மீருக்காக மூன்று போர்களை நடத்திய பாகிஸ்தான், தேவைப்பட்டால் மேலும் 10 போர்களை நடத்தவும் தயாராக உள்ளதாக அறிவித்தார்.
முதல் முறையாக, இக்கூட்டத்துக்கு ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கர வாத பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர். அதாவது, இதுவரை காஷ்மீர் ‘சுதந்திரப் போராட்டம்’ என்று நிலைப்பாட்டை இந்து- இஸ்லாம் பிரச்சனையாக உருமாற்றினார் அசிம் முனீர்.
தொடர்ந்து, முதல் முறையாகப் பாகிஸ்தானில் நடைபெற்ற வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் “மதம் முதல் வாழ்க்கை முறை வரை அனைத்து அம்சங்களிலும் நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்” என்று கூறி மதவெறியைத் தூண்டினார்.
மேலும், காஷ்மீரைப் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு (Jugular vein) என்று அழைத்த அசிம் முனீர், காஷ்மீர் மக்களைப் பாகிஸ்தான் ஒருபோதும் கைவிடாது என்றும் உறுதியளித்தார். அசிம் முனீர் இப்படிப் பேசிய ஐந்தாவது நாளில் பஹல்காமில், இந்து என்பதை உறுதிப் படுத்திய பின்,தேர்ந்தெடுக்கப் பட்ட 26 பேரைப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தொடர்ந்து, பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்தியா, பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானைத் தாக்குவதற்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி.
பஹல்காம் தாக்குதல் என்பது வெறும் பயங்கரவாதச் செயல் மட்டும் அல்ல. காஷ்மீரின் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுக்கும் செயலாகும். மேலும், மீண்டும் காஷ்மீரில் பயங்கரவாதத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி அசிம் முனீரின் இராணுவ உத்தி, பாகிஸ்தானின் பேரழிவுக்குக் காரணம் ஆகி விட்டது.