பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
அதே வேளையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்புத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலை நிறுத்தப்பட்டதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிறைநிறுத்தப்பட்டது, ஜெய் ஹிந்த், ஆப்பரேஷன் சிந்தூர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது தாக்குதல் தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அவர்கள் விவாதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.