தமிழகத்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கும் கன்னியாகுமரி தொட்டிப்பாலத்தின் தூண்கள் சேதமடைந்திருப்பது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் தொட்டிப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் பாசனத் தேவைகளுக்காக 1966 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் மாத்தூரில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது தான் இந்த தொட்டிப் பாலம்.
விவசாயத்தின் வளர்ச்சிக்காகக் கட்டப்பட்ட இந்த பாலம் பின்னாளில் ஆசியாவின் மிக உயரமான பாலமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவும் மாறியது. அத்தகைய சிறப்புமிக்க இந்த தொட்டிப் பாலம் முறையாகப் பராமரிப்பின்றி பல்வேறு இடங்களில் சேதமடைந்திருப்பது சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால் மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத்தளமாக விளங்கும் தொட்டிப்பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதும், தூண்கள் சேதமடைந்திருப்பதும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் விரும்பும் சுற்றுலாத்தளங்களில் முக்கியமானதாக இருக்கும் தொட்டிப்பாலத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.