பயங்கரவாத பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்ட ராணுவ நடவடிக்கையை ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வெற்றிகரமாக இந்தியா நடத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா எப்படித் திட்டமிட்டது ? எப்படி வெற்றிகரமாக முடித்தது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜம்மு காஷ்மீரின் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சுற்றுலாவுக்கு வந்திருந்த அப்பாவி சுற்றுலாப்பயணிகளை இந்து என்பதற்காக இஸ்லாமியப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதில் 26 உயிரிழந்தனர்.
இதற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, லஷ்கர்-இ தொய்பாவின் நிழல் அமைப்பான TRF பொறுப்பேற்றது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், தூதரக உறவுகள் நிறுத்தம்,அட்டாரி எல்லை அடைப்பு,இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்,வர்த்தகம் நிறுத்தம்,அஞ்சல் மற்றும் பார்சல் சேவை நிறுத்தம், இந்திய வான்வெளி மற்றும் கடல் வழியைப் பயன்படுத்தத் தடை,பாகிஸ்தான் இறக்குமதிக்குத் தடை எனப் பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
பயங்கரவாதிகள் பூமியில் எங்கே ஓடி ஒளிந்திருந்தாலும் தேடித் கண்டுபிடித்து வேட்டையாடப் படுவார்கள் என்று சூளுரைத்த பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுப்பதில், முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்குவதாகத் தெரிவித்தார். இந்தியா முழு அளவிலான போருக்குச் சென்று விடுமோ ? என்ற சந்தேகமும் அச்சமும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்பட்டது.
ஏற்கெனவே, கார்கில் போரின் போது, கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். அப்போதும், இந்தியா, எல்லை மீறாமல் பதிலடி கொடுத்தது.
2001 அக்டோபரில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் மீதும், டிசம்பரில் நாடாளுமன்றத்தின் மீதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தியா ஆப்ரேஷன் பராக்ரம் என்ற பெயரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தானின் தாக்குதல்களை எதிர்கொண்டது. மாறாகத் தானாக முன் சென்று தாக்குதல் நடத்தவில்லை.
2016 உரி இராணுவ முகாமில் 19 இந்திய வீரர்களைத் தாக்கிக் கொன்ற பயங்கரவாதத்துக்குப் பதிலடியாக, பயங்கரவாத ஏவுதளங்களைக் குறிவைத்து இந்தியா “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்” நடத்தியது. முதல்முறையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று 7 பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாக இந்தியா தாக்கி அழித்தது.
அடுத்ததாக, புல்வாமாவில் 2019ம் ஆண்டு, பிப்ரவரி 13ம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது, நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு மறக்கமுடியாத பாடம் கற்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து, பிப்ரவரி 26 ஆம் தேதி, நள்ளிரவு 3 மணிக்கு, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.1971க்குப் பிறகு முதன்முறையாக, பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்தியா தாக்கியது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, முப்படைகளும் ஒன்றாக இணைந்து ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு,1.05 மணியிலிருந்து, 1.30 மணி வரை மொத்தமாகவே 25 நிமிடங்களில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புக்களின் 9 முகாம்கள் குறிவைத்து துல்லியமாக அழிக்கப் பட்டுள்ளன. இதில் 90க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்.
இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ள இந்தியாவின் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ சட்டப்பூர்வமாகவும் ராஜதந்திர ரீதியாகவும் கணக்கிடப்பட்டதாக அமைந்துள்ளது. பிரதமர் மோடி நேரடி கண்காணிப்பில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்வதேச அளவில், இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தி உள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் , தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் வரையறுக்கப்பட்ட நோக்கத்தை விளக்கியுள்ளார்.
பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற முக்கியமான சர்வதேச நட்பு நாடுகளுக்கு இந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எந்த ஒரு பயங்கரவாத தாக்குதல்களையும் நாடு பொறுத்துக்கொண்டு இருக்காது என்பதையும், பயங்கரவாதத்தை வேரறுக்கும் தற்காப்பு உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று இந்தியா சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.