பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒருங்கிணைந்த துல்லியத் இராணுவத் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. சிந்தூர் என்று ஏன் பெயர் வைக்கப்பட்டது ? அதற்கு என்ன காரணம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பார்வதி பரமேஸ்வரர் திருமணத்தில் தான் முதல்முறையாக, சிவபெருமான் பார்வதியின் நெற்றியிலும் தலைவகிட்டிலும் குங்குமம் வைத்து ஆசீர்வதிக்கிறார். அன்று முதல் இல்லறத்தின் அடையாளமான குங்குமம், நல்லறத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது.
பதி பக்தியின் அடையாளமாக மட்டுமின்றி தேச பக்தியின் அடையாளமாகவும் குங்குமம் திகழ்கிறது. நாட்டைக் காப்பற்றப் போருக்குக் கிளம்பும் வீரரின் நெற்றியிலும் குங்குமம் வைத்து வாழ்த்தி அனுப்புவது பாரத பண்பாடு. மேலும் வெற்றியின் அடையாளமாகவும் குங்குமம் இருக்கிறது. அதனால் தான், வெற்றிபெற்ற வீரர்களின் நெற்றியில் வெற்றித் திலகம் உள்ளது.
பஹல்காமில், புது மணத் தம்பதியர் உட்படச் சுற்றுலாவுக்கு வந்தவர்களில் இந்து என்று உறுதிப்படுத்திய பிறகு, ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களின் நெற்றியில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
திருமணமான ஆறே நாளில் தேனிலவுக்கு வந்த இடத்தில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தனது கணவர், கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் பிணத்துக்கு அருகில்,நெற்றியில் குங்குமத்துடன் கண்ணீருடன் ஹிமாங்கி நர்வால் அமர்ந்திருக்கும் புகைப்படம் பயங்கவாதத்தின் அடையாளமாக இருந்தது. கணவரின் இறுதிச் சடங்குகள் முடிந்த நிலையில், தனது கணவருக்கு அஞ்சலி செலுத்திய ஹிமாங்கி நர்வாலின் நெற்றியில் குங்குமம் இல்லை.
பெண்ணின் நெற்றியில் உள்ள குங்குமம், அந்தப் பெண் திருமணமானவர் என்றும், அவளுடைய கணவர் உயிருடன் இருக்கிறார் என்பதையும் அடையாளப்படுத்துகிறது. திருமணமான இந்து பெண்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார அம்சமாகக் குங்குமம் விளங்குகிறது.
பஹல்காம் தாக்குதலில் 25 இந்து பெண்களின் கணவர்களைக் கொன்று, இந்து பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்தியா வைத்துள்ளது.
பயங்கரவாதத்துக்குத் தங்கள் கணவரை இழந்த இந்து பெண்களுக்கு நீதி வழங்கும் இராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் பொருத்தமானதாகும். பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கர வாதிகளின் தாக்குதலுக்குப் பலியானவர்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் நீதி வழங்குவதற்கான ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக இந்தியா நடத்தி முடித்துள்ளது.
லஷ்கர்-இ -தொய்பா,ஜெய்ஷ்-இ-முகமது, மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன்உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத நெட்வொர்க்கை முற்றிலுமாக இந்தியா இராணுவம் அழித்துள்ளது.
ஏற்கெனவே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாங்கள் ஒன்றும் வளையல் அணிந்திருக்கவில்லை என்று இந்தியாவைக் குறித்து ஏளனமாகப் பேசியிருந்தனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியாவில் வளையல் அணிந்த கைகள் என்ன செய்யும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்குக் காட்டி இருக்கிறது.
லெப்டினன்ட் சோபியா குரேஷி,விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய பெண் வீரர்களைக் கொண்டே பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்- நாட்டின் வலிமையையும், பயங்கரவாதத்துக்குப் பலியானவர்களுக்குப் பாதிக்கப் பட்டவர்களுக்கும் நீதியை நிலைநிறுத்தும் இந்தியாவின் வீர நடவடிக்கையாகும். குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளைக் குங்குமத்தின் பெயராலே வேரறுத்து உள்ளது இந்திய இராணுவம். ஜெய்ஹிந்த் என்று உரக்கச் சொல்லி இந்தியாவைப் போற்றுவோம்.