ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, டி.ஆர்.பாலு, ஓவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 90 நிமிடங்கள் நடைபெற்ற கூட்டத்தில், ராணுவம் எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக கூறினார். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாகவும் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடாத வரை இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காது எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.