நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க் கடன் வாங்கியிருந்தது.
வட்டியுடன் கூடிய 9 கோடியே 39 லட்சம் ரூபாயைத் திரும்பச் செலுத்தவில்லை என்பதால் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த உத்தரவைத் தனி நீதிபதி ரத்து செய்தார்.
இந்நிலையில் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது என தெரிவித்தது.
மேலும், மேல்முறையீட்டு வழக்கு குறித்து நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.