இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை நடுவானில் இடைமறித்து இந்தியா முறியடித்துள்ளது. ஆனால் இந்தியாவின் ஏவுகணைகளைத் தடுக்க முடியாத நிலையில் தான் பாகிஸ்தான் உள்ளது. இது பற்றிய செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையை இந்தியா நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்களில் 21 பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஒரே நேரத்தில் இந்தியா ஏவுகணை வீசி அழித்தது.
குறிவைத்த இலக்குகளைத் துல்லியமாக 24 ஏவுகணைகளை வீசி, 25 நிமிடங்களில் இந்த தாக்குதல்களை வெற்றிகரமாக இந்தியா நடத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து வரும் ஏவுகணைகளைப் பாகிஸ்தானால் ஏன் நடுவானில் அழிக்க முடியாமல் போனது என்று இப்போது விவாதம் நடந்து வருகிறது.
இந்தியாவின் ரஃபேல், சுகோய் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் போன்ற வான் தாக்குதல்களை எதிர்கொள்ள, சீன பாதுகாப்பு அமைப்பையே பாகிஸ்தான் நம்பியுள்ளது. China Precision Machinery Import-Export கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு தான் HQ-9 . இது, தரையிலிருந்து செலுத்தப்படும் வான் இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்பாகும். HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை 2021ம் ஆண்டு, தனது இராணுவத்தில் பாகிஸ்தான் சேர்த்துக் கொண்டது.
HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு 125 முதல் 200 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக் கூடியவையாகும். HQ-9B மாடல், 300 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் ஆற்றல் உடையதாகும். இது, 50 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பொருட்களைக் குறிவைத்துத் தாக்கக் கூடியதாகும். மேலும் ஒரே நேரத்தில் 100 இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டதாகும்.
2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையே சீனாவிடமிருந்து 599 மில்லியன் டாலர் மதிப்புடைய 9 யூனிட் HQ-16 வான் அமைப்புகளைப் பாகிஸ்தான் வாங்கியது. இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு இணையாக HQ-9 வகை வான் அமைப்புகள் இருக்கும் என்று பாகிஸ்தான் நம்பியது. ஆனால், 400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய S-400க்கு முன்னால் HQ-9 திறன் குறைவானதே.
ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் ஏவுகணைகளைத் தடுக்க எந்தவொரு பாதுகாப்பு அமைப்பையும் பாகிஸ்தான் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் உடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. முதல்கட்டமாகக் கடந்த 2020-ம் ஆண்டு, தொடங்கி படிப்படியாக ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியக் கடற்படைக்குத் தனியாக 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் கையெழுத்திட்டுள்ளன.
ஏற்கெனவே, சீனாவிடமிருந்து குறைந்தது 20 நவீன J-10 போர் விமானங்களை வாங்கியுள்ளது. அவை PL-15 ஏவுகணைகளைக் கொண்டவையாகும். சீனாவுக்கு வெளியே சீனாவின் இந்த போர் விமானங்களைப் பாகிஸ்தான் மட்டுமே பயன்படுத்துகிறது . பாகிஸ்தானின் ராணுவத்திடம் PL-15E-ஐ சுமந்து செல்லும் திறன் கொண்ட இருபது J-10CE விமானங்கள் மற்றும் 50 JF-17 Block III விமானங்கள் என 70 விமானங்கள் மட்டுமே உள்ளன. PL-15 ஏவுகணைகள் மேக் 5 வேகத்தில், 300 கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாகும்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட SH-15 155mm Mounted Gun Systems (MGS)பயன்படுத்தி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் பயன்படுத்தும் ட்ரோன்களில் பெரும்பாலானவை சீனா மற்றும் துருக்கியிலிருந்து வாங்கப் பட்டவை என்று நம்பப் படுகிறது. Wing Loong II மற்றும் CH-4 ட்ரோன்கள் போலவே பாகிஸ்தானின் ட்ரோன்கள் இருப்பதாக இராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
2020 மற்றும் 2024க்கு இடையில் அதிகமான ஆயுதங்களைப் பாகிஸ்தானுக்குச் சீனா விற்பனை செய்துள்ளது. பாகிஸ்தானின் மொத்த ஆயுத இறக்குமதியில், சீனாவின் பங்கு 81 சதவீதமாகும். நெதர்லாந்து மற்றும் துருக்கியிருந்தும் முறையே 5.5 சதவீதமும், 3.8 சதவீதமும் இராணுவத் தளவாடங்களைப் பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது.
பாகிஸ்தானின் JF-17 மற்றும் PL-15 ஆகியவை போர் பதற்றங்களை அதிகரிக்கும் அதே வேளையில், இந்தியாவின் விமானப் படையைச் சமாளிக்க முடியாமல் புஸ்வாணமாகி விடுகிறது என்பது தான் உண்மை.